கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 30, 2009

இஸ்லாத்தின் மனிதநேயம் பாகம் -1


بسم الله الرحمن الرحيم

            நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித நேயத்தின் தந்தையாகத் திகழ்ந்து, நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.


            (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ர­) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ர­) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.
            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''மக்களே! உங்களை ஒரே ஆன்மாவி­ருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்'' எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள ''நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்'' எனும் (59:18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.
            அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளி­ருந்தும் வெள்ளிக் காசுகளி­ருந்தும் ஆடைகளி­ருந்தும் ஒரு ஸாஉ கோதுமையி­ருந்தும் ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்தி­ருந்தும் தர்மம் செய்தார்கள்.
            அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் கண்டேன்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­லி), நூல்: முஸ்­லிம் (1691)
            இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்திலும் இருந்த மனித நேயத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. வறுமையால் பீடிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்த உடன் பெருமானாரின் முகம் மாறி அவர்கள் தவித்ததும் பொருட்கள் குவிந்த பின்பே அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டதும் அவர்களிடத்தில் அளவில்லா மனிதநேயம் இருப்பதைக் காட்டுகிறது.
            இன்றைக்கு எத்தனையோ நாடுகளில் வாழும் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். பசிக் கொடுமையினால் சாகவிருக்கும் ஒரு சிறுவனைத் திண்பதற்குக் கழுகு காத்திருந்த சம்பவம் கொடிய நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளத்தைக் கூட கரையச் செய்து விடும். செல்வாக்கில் உயர்ந்து நிற்கின்ற மேலை நாடுகள் தங்களுடைய தேவைக்குப் போக டன் கணக்கில் பாலையும் மாவையும் வீணாகக் கட­ல் சென்று கொட்டுகிறார்கள். லாரி லாரியாக தக்காளிகளையும் திராட்சைகளையும் கொண்டு வந்து மகிழ்ச்சி என்ற பெயரில் எறிந்து விளையாடுகிறார்கள்.
            உலகத்தில் கிடைக்கின்ற எல்லாப் பழங்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து, அதில் குரங்குகளை விட்டு அவை அவற்றை நாசப்படுத்துவதைப் பார்த்து பூரிப்படைகிறார்கள். ஒரு பக்கம் உணவு இல்லாமல் மனிதஉயிரினம் வாட, ஆடம்பரப் பிசாசுகள் இப்படி வீண் விரயம் செய்கிறார்கள்.

            உண்மையில் மனிதநேயம் இருந்தால் இது போன்று இவர்கள் செய்வார்களா? அரும்பாடு பட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா? நபி (ஸல்) அவர்கள் காட்டிய இந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப் பொருட்களை வீணாக்குவார்களா? உலகம் இதைத் தீவிரமாகக் கண்காணிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.

எதிரிகளிடத்தில் மனிதநேயம்
            பொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத, நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். ஆனால் இஸ்லாம் பரம எதிரியிடத்தில் கூட மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது தான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும் மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம்.
            ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாச­ல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், ''நிறுத்து, நிறுத்து'' என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, ''அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்'' என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து ''பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்'' என்று கூறி உபதேசம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க்(ரலி­), நூல்: முஸ்­லிம் (429)
            இன்றைக்கு யாராவது ஒரு கோவி­லோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாச­லோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம் தான். நாம் புனிதமாக மதிக்கும் ஆலயத்தை ஒருவர் அசுத்தம் செய்யும் போது யாரும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம். சஹாபாக்களும் கோபப்பட்டு அவரை அடிப்பதற்குச் சென்றார்கள். ஆனால் மனித நேயத்தின் மறுஉருவாய் திகழ்கின்ற நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைத் தடுத்தார்கள்.
            நமது வீட்டை ஒருவர் அசுத்தம் செய்தால் அவரை நாம் அடிக்காமல் விட மாட்டோம். வீட்டை விடப் புனிதமான பள்ளிவாச­ல் ஒருவர் சிறுநீர் கழித்த போதும் கூட அவர் துன்புற்று விடக்கூடாது என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மனித நேயத்தை வர்ணிக்க உலகில் வார்த்தைகள் உண்டா?
            நபி (ஸல்) அவர்கள் உண்மை மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு அதிகமதிகம் எதிரிகள் இருந்தார்கள். பெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு.        ''அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)'' என்று சொல்வதற்குப் பதிலாக, ''அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்)'' என்று நேருக்கு நேராக சபித்தவர்கள் அந்த யூதர்கள். நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கையானவர் என்று தெரிந்து கொண்டே அவர் நம் பொருளைப் பறித்து விடுவார் என்று கூறி மக்களிடத்தில் கேவலமாகப் பேசியவர்கள் அந்த யூதர்கள். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள்.
            நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி­) , நூல்: புகாரி (1356)
            நபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில், ''இது ஒரு யூதனின் பிரேதம் (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அதுவும் ஒரு உயிர் தானே'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ரலி­), நூல்: புகாரி (1313)
            நபி (ஸல்) அவர்கள் யூதன், கிறித்தவன் என்று பாராமல் மனிதன் என்று பார்த்துள்ளார்கள். உயிரை உயிராக மதிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். ஒரு துக்க கரமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது நாம் அமர மாட்டோம். நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் மனிதநேயத்தைக் கடைப் பிடிப்பதில் படித்தவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசானாகத் திகழ்ந்துள்ளார்கள்.

No comments: