கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 22, 2009

புனிதமிக்க முஹர்ரமும் புரியாத முஸ்லிம்களும்

முஹர்ரம் மாதம் சம்பந்தமாக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சர்பாக ஊரில் விநியொகிக்கப்பட்ட துண்டு பிரசுரம்.

புனிதமிக்க முஹர்ரமும் புரியாத முஸ்லிம்களும்

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு

புனிதமிக்க இஸ்லாத்தில் சில நாட்கள், சில மாதங்கள் புனிதமிக்கவையாக உள்ளன. அந்தப் புனிதமிக்க நாட்களும், மாதங்களும் எதற்காக? அந்த நாட்களில் உண்டு மகிழ்ந்து வீண், விளை யாட்டுக்களில் ஈடுபட்டு கந்தூரி கொண்டாடுவதற்காக அல்ல! மாறாக அந்த நாட்களின் புனிதத்துவத்தை உணர்ந்து, அவற்றின் பின்னணியிலுள்ள வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, அதிலிருந்து நாம் படிப்பினை பெற்று பழுதடைந்த நம் வாழ்க்கைப் பாதையை சீர்படுத்தி, செப்பனிடுவதற்காக!
அந்தப் புனிதமிக்க மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதம். முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ் வுடைய மாதம்' என்று நபி(ஸல்)அவர்கள் சிலாகித்துச் சொல்லியிருப்பது அதன் சிறப்பை உணர்த்து வதாக உள்ளது. (பார்க்க: முஸ்லிம்-1163) மகத்துவமிக்க இந்த முஹர்ரம் மாதத்தில் ஒரு நாள் புனிதமிக்க நாளாகும். அந்த நாள் 'ஆசுரா' எனும் பத்தாம் நாளாகும்.

நபி(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆசுரா நாளில் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்? இதில் நீங்கள் நோன்பு நோற்றுள்ளீர்களே?' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இது மகத்தான நாளாகும். இந்த நாளில்தான் மூஸாவையும் அவர்களின் சமுதாயத்தையும் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்தாரையும் (நீரில்) மூழ்கடித்தான். எனவே மூஸா (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காக இந்த நாளில் நோன்பு நோற் றார்கள். அதனால் நாங்களும் இன்று நோன்பு நோற்கிறோம்' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் 'உங்களை விட மூஸாவுக்கு நாங்கள்தான் அதிக தகுதியும் உரிமையும் உடையவர்கள்'என்று கூறி அந்த நாளில் நோன்பு வைத்தார்கள். பிறரையும் நோன்பு நோற்குமாறு உத்திரவிட்டார்கள். (புகாரி-2004, முஸ்லிம்-1130) (மூஸா நபியின் வரலாற்றுச் சுருக்கத்தை 7:103-126, 26:61-67- ல் காண்க.)

ஆசுரா நாளின் சிறப்பு

இந்த ஆசுரா நாளில் நாம் நோன்பு நோற்பது சிறப்பாகும். 'ரமலானுக்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்' என்பது நபிமொழி. (முஸ்லிம்-1163)
ஆசுரா நோன்பு பற்றி நபி(ஸல்)அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அது சென்ற வருடத்தின் பாவங்க ளுக்குப் பரிகாரமாகும்' என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்-1162)
என்றாலும் நாம் முஹர்ரம் 9-ம் நாளும் 10-ம் நாளும் நோன்பு வைப்பது நபிவழியாகும். நபி(ஸல்) அவர்கள் ஆ'_ரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டபோது ஷஅல்லாஹ்வின் தூதரே! இந்த நாள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்தும் நாளாயிற்றே
என்று தோழர்கள் கூறினர். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'அல்லாஹ் நாடினால் எதிர் வரும் ஆண்டில் ஒன்பதாம் நாளும் சேர்த்து நோன்பு நோற்போம்' என்று கூறினார்கள். ஆனால் அடுத்து ஆண்டு வருவ தற்குள் அவர்கள் மரணித்து விட்டார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். முஸ்லிம்(1134)
நபி(ஸல்) அவர்கள் எல்லா காரியங்களிலும் யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யச் சொல்லி யிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

முஹர்ரம் மாதத்தின் பித்அத்
நபி(ஸல்)அவர்களுக்குப் பிறகு முஹர்ரம் 10-ம் நாளில் கர்பலாவில் ஹுஸைன்(ரலி)கொல்லப்பட்டதை காரணமாக வைத்து இன்றும் அதே நாளில் அந்த துக்கத்தைக் காட்டுவதற்காக சிலர் பஞ்சா எடுத்து, பூக்குழி இறங்குகின்றனர். தங்கள் சட்டைகளைக் கிழித்து மார்புகளில் அடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் கொளுக்கட்டை சுட்டு ஹுஸைன்(ரலி) அவர்களுக்காக ஃபாத்திஹா ஓதுகின்றனர். இன்னும் சிலர் நபி(ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிய ஆ'_ரா நோன்பைக் கூட ஹஸனார், ஹுஸைனா ருக்காக நோற்கப்படும் நோன்பு என்று கருதுகின்றனர். இது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரிய மாகும். இன்னும் சிலர் முஹர்ரம் மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இவையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத பிற்காலத்தில் உருவான பித்அத்துகள்- புதுமைகள் ஆகும்.

'நம்மால் ஏவப்படாத காரியத்தை எவன் செய்கிறானோ அது நிராகரிக்கப்படும்' என்றும், 'நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவன் உருவாக்குகிறானோ அது நிராகரிக்கப்படும்' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்:1718,2697)

'(துன்பத்தின்போது) கன்னத்தில் அடித்துக்கொள்பவனும், சட்டையைக் கிழித்துக் கொள்பவனும், முட்டாள்தனமான வார்த்தைகளால் புலம்புபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல.' (புகாரி: 1297, முஸ்லிம்:103)

என்றெல்லாம் நபி(ஸல்)அவர்கள் கூறியிருப்பதால் இதுபோன்ற பித்அத் மற்றும் அநாச்சாரங்களி லிருந்தும் நாம் விலகிக்கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!

இவண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கடையநல்லூர்.

No comments: