கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 21, 2009

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் பாகம் - 1

இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளனர்.


இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில பாவங்கள் மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன. பெரிய பாவங்கள் எவை? என்பதை அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப் பெரும் பாவங்களில் உள்ளவையாகக் கருதப்படும் சில குற்றங்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை அவன் நம்மைப் பார்க்காமலும் நம்மிடம் பேசாமலும் நமது பாவக் கறைகளைச் சுத்தம் செய்யாமலும் இருப்பதாகும்.


இவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருக்குர்ஆனில்


"அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள் என்று குறிப்பிடுகிறான்." (அல்குர்ஆன் 83:15)


"கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு" (அல்குர்ஆன் 2:174)


''மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண் கூடாகக் காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோமோ அது போன்று அல்லாஹ்வைக் காண்போம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ர­), நூல்: புகாரீ 7435


அல்லாஹ்வைப் பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. மிகப்பெரிய பாக்கியம்.


சொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது, ''இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று அல்லாஹ் கேட்பான். ''நீ எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா?'' என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக வேறு எதுவும் இருக்காது.


அறிவிப்பாளர்: ஸுஹைப் (ர­) நூல்: முஸ்­ம் 266


அல்லாஹ் திருக்குர்ஆனில் பேச மாட்டான் என்று கூறுவதன் பொருள், நல்ல வார்த்தைகளால் அன்போடு பேச மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நரக வாசியைப் பார்த்து வேதனையைச் சுவை என்று கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது.


"சுவைத்துப் பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்)" (அல்குர்ஆன் 44:49)


இன்னும் கே­ செய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்த மாட்டான் என்றால் பாவத்தி­ருந்து தூய்மைப் படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்க மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.


குர்ஆனிலும் நம்பத் தகுந்த நபிமொழியிலும் 12 நபர்கள் இந்தத் தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று நபர்கள் பற்றி வரும் செய்திகள் பலவீனமானவை ஆகும். மீதமுள்ள 9 நபர்கள் பற்றிய செய்தி ஆதாரப் பூர்வமானதாகும். அவற்றின் விவரத்தைக் காண்போம்.




(1) வேதத்தை மறைத்தவர்கள் ;




அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.


"அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு"


(அல்குர்ஆன் 2:174)


இன்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்களைத் தவறு என்று அவர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்குப் பாதிப்பு வந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.


உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது, கத்தம், பாத்திஹா போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆ­ம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டன. இவற்றைச் செய்யும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆ­ம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன் வருவதில்லை.


இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.


இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விட மிருந்து தப்பிக்க முடியாது. நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிட மாட்டான்.


"உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்". (அல்குர்ஆன் 15:92)


"யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்". (அல்குர்ஆன் 7:6)


இதை ஸஹாபாக்கள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். அபூஹுரைரா (ர­) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சிலர் குறை கூறினர். இக்குறையை அபூஹுரைரா (ர­) அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்குக் கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம்.


"மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்". (அல்குர்ஆன் 2:159)


இந்த வசனத்தை அபூஹுரைரா (ர­) அவர்கள் சுட்டி காட்டி ''இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள்.


அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­) நூல்: புகாரீ 118


மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தைச் செய்யக் கூடாது என்று நமக்கு முன்னர் வேதம் வழங்கப் பட்டவர்களான யூத, கிறித்தவர் களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தண்டனையைச் சம்பாதித்துக் கொண்டார்கள்.


வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)


நாம் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற் காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோரிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.


"அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு". (அல்குர்ஆன் 3:77)


தொடரும்.........

No comments: