கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 16, 2009

சாதனையா? வேதனையா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
சாதனையா? வேதனையா?
                           கே.எம்.அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி
இரமலான் பிறை 23 ஆம் இரவில் காயல் பட்டிணத்தில் அமைந்துள்ள ஆறாம் பள்ளி தொழுகைப் பள்ளிவாசலில் ஒரு நாடகம் அரங்கேறியதை காயல்பட்டிணம் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள். குர்ஆனை ஒரே இரவில் முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்று யாரோ(?) ஒருவர் நிய்யத் செய்தாராம். அதை நிறைவேற்றுவதற்காக இலட்சங்களை விலை பேசி ஒரு ஹாஃபிளை அழைத்து வந்து ஓரே இரவில் இரண்டு இரக்அத்களில் முழுக்குர்ஆனையும் அவர் ஓதி முடித்ததாக கூறிக் கொண்டார்கள். இது மாபெரும் சாதனை என்று அறியாத மக்களெல்லாம் பேசிக் கொண்டார்கள். இது மாபெரும் சாதனையா? அல்லது வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனையா? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
முறையற்று ஓதப்பட்ட திருக்குர்ஆன்
திருக்குர்ஆனை நாம் எவ்வாறு ஓதவேண்டும் என்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.  அதிலும் குறிப்பாக இரவில் நின்று தொழுகின்ற தொழுகையில் நாம் எவ்வாறு ஓதவேண்டும் என்று அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :
போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 1-4)
குர்ஆனை நிறுத்தி, நிதானமாக, திருத்தமாக ஓதவேண்டும் என்பதுதான் இறைவனுடைய கட்டளையாகும். இதோ நபியவர்கள் திருக்குர்ஆனை ஓதிய முறையைப் பாருங்கள்.
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந் நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து   தொழலானார்கள்; அப்போது ஓர் அத்தியாயத்தை (ஓதினால் வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் ஓதும் சிறிய அத்தியாயம்கூட குர்ஆனிலுள்ள) நீளமான அத்தியாயங்களில் ஒன்றைப் போன்றாகிவிடும்.
நூல் : முஸ்லிம் 1336
''நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை  எப்படியிருந்தது?'' என  அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கவர்கள், ''நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு,  'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா...ஹ்' என நீட்டுவார்கள்; 'அர்ரஹ்மா...ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹீ...ம்' என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலüத்தார்கள்.
(நூல் : புகாரி 5046(
இன்னும் இதுபோன்ற ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன.
தொழுகையில் அதுவும் சுன்னத்தான தொழுகைகளில் குர்ஆனை நிறுத்தி நிறுத்தி தெளிவாக ஓதவேண்டும் என்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். ஆனால் ஆறாம் பள்ளியில் அரங்கேறிய நாடகத்தில் இந்த ஒழுங்குகள் பேணப்பட்டதா? ஆயிரக் கணக்கான தவறுகளுடன் என்ன ஓதப்படுகின்றது என்பது கூடத்தெரியாமல் ஏனோ தானோவென்ற முறையில் குர்ஆன் அவமதிக்கப்பட்டதை அனைவரும் கண்டு கழித்தோம். நபி (ஸல்) அவர்கள் ஓதிய முறைப்படி நிறுத்தி நிறுத்தி நிதானமாக ஓரே இரவில் பிழையில்லாமல் ஓதிக்காட்டக்கூடியவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருகிறோம் என்று சவாலாகவே அறிவிக்கிறோம். இந்த அறிவிப்பின் நோக்கம் ஒரே இரவில் குர்ஆனை முடிக்கவேண்டும் என்பதற்கல்ல. அது ஒரு போதும் சாத்தியமற்றது என்பதை நிரூபிப்பதற்காகத்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓரே இரவில் குர்ஆனை ஓதி முடிக்கலாமா?
ஒரே இரவில் குர்ஆனை ஓதிமுடிப்பது நன்மையான காரியம் என்று நினைக்கின்றோம். ஆனால் இது நபியவர்களின் சுன்னத்திற்கு எதிரான பாவச் செயலாகும். ஒரே இரவிலென்ன ஒரு நாளிலோ, இரண்டு நாளிலோ கூட குர்ஆனை ஓதிமுடிப்பது பாவமான காரியமாகும். குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அதனை ஓதும் போது அதற்குரிய கண்ணியத்துடன் நிறுத்தி நிதானமாக ஓதவேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் இவ்வாறு நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!'' என்று கூறினார்கள். அப்போது நான், ''(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது'' என்று கூறினேன். ''அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே'' என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5054
''ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!'' என்றார்கள். ''இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது!'' என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில், ''மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (1978)
அதிக பட்சம் ஏழு அல்லது மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிப்பது கூடாது எனும் போது நாங்கள் ஒரே இரவில் குர்ஆனை ஓதி முடித்துவிட்டோம் என்று கூறுவது இறைநம்பிக்கையாளர்களின் பார்வையில் சாதனையல்ல. மாறாக இறைவனின் கோபத்தை பெற்றுத் தரும் வேதனையாகும்.
சிலர் சில பெரியார்கள் இவ்வாறு ஓரே இரவில் ஓதியிருக்கின்றார்களே எனக் கூறலாம். நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக யார் செய்திருந்தாலும் அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது. நபியவர்களின் வழிகாட்டுதலைத்தான் நாம் நம் உயிருக்கும் மேலாக பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
(அல்குர்ஆன் 33 ; 21)
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
(அல்குர்ஆன் 33 : 6)
சக்திக்கு மீறி நின்று வணங்கலாமா?
குர்ஆனை ஓரே இரவில் ஓதி முடிக்கிறோம் என்ற பெயரில் நடந்த அனாச்சாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தக்பீர்கட்டியிருக்கும் நேரத்தில் திடீரென்று இரண்டு கைகளையும் தொங்கவிட்டுக் கொண்டே ஓதுகிறார். (ஒருவேளை திடீரென்று இரண்டு நிமிடம் மாலிக் மத்ஹபிற்கு மாறிவிட்டாரோ?) கால்வலியினால் கால்களை அங்குமிங்கும் மாற்றி மாற்றி வைக்கின்றார். தொழுபவர்களுக்கு குறுக்கே சென்று பன்னீர் ஊற்றுவதற்கென்று ஒருவர். அவர் தொழுபவர்களின் கைகளிலும் கால்களிலும் மேனியிலும் குறுக்கே சென்று அவர்களின் மீது பன்னீரைக் கொட்டினார். பன்னீரை ஊற்றும் போது கைகளில் ஊற்றாதே கால்களில் ஊற்று இடுப்பில் ஊற்று என்று இருவருக்கும் உரையாடல் வேறு. இந்த நாடகத்தை அரங்கேற்ற இலட்சக்கணக்கான ரூபாய் வீண்விரயம்.
இப்படியெல்லாம் நம்முடைய மார்க்கம் நமக்கு வழிகாட்டுகின்றதா? நம்முடைய சக்திக்கு மீறி கைகால் வலியோடு நாம் தொழலாமா? இதோ அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களைப் பாருங்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவாகள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்குள்) வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. ''இந்தக் கயிறு என்ன (ஏன்)?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''இது (தங்கள் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது (உபரியான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 1150
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என்னிடம் பனூஅசத் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, 'யார் இவர்?' என்று கேட்டார்கள். நான் ''இவர்  இன்னார்'' என்று கூறிவிட்டு 'இரவெல்லாம் உறங்க மாட்டார் (தொழுதுகொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து (புகழ்ந்து) பேசினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''போதும் நிறுத்து!'' என்று கூறிவிட்டு (வணக்க வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான்'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (1151)
நம்முடைய சக்திக்கு மீறி எந்த விதமான வணக்க வழிபாடுகளையும் செய்யக்கூடாது என்பதுதான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விதித்த விதிமுறையாகும். இதை மீறக்கூடியவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியுமா?
பன்னீர் ஊற்ற குறுக்கே சென்ற புண்ணியவான்(?)
தனக்கு இயலாவிட்டால் சுன்னத்தான தொழுகைகளை தொழவேண்டிய கடமையில்லை என்பதை உணராமல் கை கால் வலியைப் போக்குவதற்காக இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பன்னீரை கைகளிலும் கால்களிலும் ஊற்றிக் கொண்டார்கள். அதை ஊற்றக் கூடியவர் தொழுபவர்களின் குறுக்கே சென்று சைத்தானிய வேலையை அரங்கேற்றினார். குறுக்கே செல்பவரை தடுக்க வேண்டும் என்பதைக் கூட அறியாத பக்திமான்கள் அவரை வரவேற்று ஷைத்தானிற்கு அடைக்கலம் கொடுத்த அவலட்சணமும் அங்கே அரங்கேறியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுதுகொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்)தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
அறிவிப்பவர் : அபூஜுஹைம் (ரலி)  நூல் : புகாரி (510)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.
அறிவிப்பார் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3274
 இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான அனாச்சாரங்கள் நிறைந்த காரியத்தை நாம் செய்யலாமா? இஸ்லாமிய பொதுமக்கள் இதனை சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். ஆலிம்கள் இதனைக் கண்டும் காணாததுமாக வாய்பொத்தியிருப்பதுதான் வேதனையிலும் வேதனையானதாகும்.
என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுது கொள்ளுங்கள்
(புகாரி 631)
என்று போதித்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களில் இது போன்ற தொழுகையில்லை. அனாச்சாரங்களில்லை.
எனவே நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்லும் இது போன்ற பித்அத்தான அனாச்சாரங்களைத் தவிரந்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வாமாக.

No comments: