கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 18, 2009

பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை

ஷவ்வால் பிறை ஒன்றிலும், துல்ஹஜ் பிறை பத்திலும் ஆக இரண்டு பெருநாள் தொழுகைகளை மார்க்கம் கடமையாக ஆக்கியுள்ளது. இவ்விரண்டும் மிக அவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையாகும். இவ்விரண்டு பெருநாளும் இஸ்லாமிய மக்களுக்கு சந்தோஷமான நாட்களாகும்.
'அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது மதீனாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனா வாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் இந்த இருநாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது எனக் கேட்டார்கள்? அதற்கு அவர்கள் அறியாமைக் காலத்தில் (இந்த நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம். என்றனர். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்கு பதிலாகவும் 'அள்ஹா' (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், 'பித்ரு' (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவூத் 1004
'நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜப் பெருநாளிலும் கன்னிப் பெண்களையும் வாலிபப் பெண்களையும் பெருநாள் திடலுக்கு புறப்படச் செய்ய வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டவர்கள் (மட்டும்) தொழுமிடத்திலிருந்து விலகி நல்ல காரியத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் அழைப்புப் பணியிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள்' அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 980
மாதவிடாய் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து பெருநாள் தொழுகை என்பது மிக முக்கியமானது என்பது தெளிவாகிறது.

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்

'நோன்புப் பெருநாள் தொழுகைக்கு உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜப் பெருநாளில் தொழுகைக்கு முன் உண்ணமாட்டார்கள்' அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்: திர்மிதி 497
'நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரித்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்' அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 953
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
    பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும்போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
'பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவ தற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள் வார்கள்' அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986

திடல் தொழுகை

இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) செய்வதும் கேட்பதும், வேறு சில கடமைகளை செய்வதும் நபிவழியாகும்.
'நபி(ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் ஹஜ்ஜு பெருநாட்களில் முஸல்லா எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள்.' அறிவிப்பவர் : அபு ஸயிது அல் குத்ரி(ரலி) நூல்: புஹாரி
இந்த ஹதிஸின் அடிப்படையில் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழாமல் திடலுக்கு சென்றுதான் தொழ வேண்டும்.
தக்பீர் கூறுதல்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்  மேலும் திடலில் தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
'பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள்  ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்' அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா(ரலி) நூல்கள்   புகாரீ (971) முஸ்லிம் (1474)
அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி(ஸல்) அவர்கள் தனியான எந்த தக்பீரையும கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
'உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!' (அல்குர்ஆன் 7:205)

தொழும் முறை

பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் மற்றும் முன்-பின் சுன்னத் தொழுகைகள் இல்லை.
'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒருமுறை அல்ல இருமுறை அல்ல பலமுறை பெருநாள் தொழுகை தொழுதிருக்கிறேன். அதில் அவர்கள் பாங்கு, இகாமத் கூறியதில்லை' அறிவிப்பவர்: சமுரா(ரலி) நூல்: திர்மிதி 489
'நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை'  அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி 1431
பெருநாள் தொழுகை ஏனைய தொழுகைகளைப் போன்றே தொழப்பட்டாலும் இந்தத் தொழுகையில் அதிகப்படியாக பன்னிரண்டு தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும்.
 'நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், 2வது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள். இவ்விரண்டு தக்பீர்களையும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.'      அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்: அபுதாவுத் 971, பைஹகீ 5968, தாரகுத்னீ
 சாதாரண தொழுகையில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையில் உண்டு. 12 தக்பீர்கள் மட்டும் தான் மேலதிகமான செயலாகும்.
அதே போல் இவ்வாறு இமாம் தக்பீர் கூறும் போது கைகளை காது வரை உயர்த்தி அவிழ்த்து கட்டும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அவ்வாறு இருந்ததாக ஹதீஸ்களில் காணப் படவில்லை. ஏனெனில் தக்பீர் என்பது வாயால் சொல்வது தான் என்பதை நாம் விளங்கி செயல்பட வேண்டும். ஆதாரமில்லாத செயல்களை செய்து நம் தொழுகைகளை பாழ்படுத்தி விடக்கூடாது.
ஓத வேண்டிய சூராக்கள்
'நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் ஸுரத்துல் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஸுரத்துல் காஷpயா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்'
'சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஸுரத்துல் கமர் (54வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்'
'நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம
ரப்பிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷpயா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும் ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்' அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூல்கள்: முஸ்லிம் 1452 திர்மிதீ 490
'அபூவாகித் அல்லைஸீ(ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்  நோன்புப் பெருநாள் தொழுகையில் என்ன ஓதுவார்கள்? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டபோது அவ்விரு தொழுகையிலும் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்ற 50 வது அத்தியாயத்தையும்), இக்தரபத்திஸ் ஸாஅத்தி வன் ஷக்கல் கமர் (என்ற 54 வது அத்தியாயத்தையும்) ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்   உபைதுல்லாஹ் நூல்கள்: முஸ்லிம் 1477 திர்மிதீ 491
குத்பா உரை
பெருநாள் தொழுகை முடிந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்துவார்கள்'
'நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையை துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்கு போதனை செய்தார்கள்' அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புஹாரி
 இதனடிப்படையில் குத்பா உரையை கேட்க வேண்டும் என அறிய முடிகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் தொழுகை முடிந்தவுடன் இடத்தை விட்டு வெளியேறி விடுகிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பெண்கள் பகுதிக்கும் சென்று உரை நிகழ்த்தினார்கள் என்றால் பெருநாள் உரை எந்தளவுக்கு அவசியம் என்பதை உணர்ந்து உரை முடிந்தவுடன் கலைந்து செல்வது தான் நபி வழியாகும்.
பெருநாள் தொழுகையில் பெண்கள்!
'பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும் கூடாரத்திலுள்ள கண்ணிப் பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்கு பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.' அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) நூல்: புஹாரி
பாதையை மாற்ற வேண்டும்!
'நபி(ஸல்) அவர்கள் ஒரு பாதையில் வருவார்கள். இன்னொரு பாதையில் திரும்புவார்கள்.' அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: இப்னுமாஜா, அபுதாவுத்
ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால்...!
'     இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்த பெருநாள் தொழுகையை தொழுகின்றாரோ அவர் ஜும்மா தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்மா தொழுகையை நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி)   நூல்: அபுதாவுத்                
பெருநாளின் புனிதத்தை உணர்ந்து அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியில் நம் அமல்களை அமைத்துக்கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாக  கொண்டாடி ஈருலக நன்மையை அடைய வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக!
ஷவ்வால் மாத ஆறு நோன்பு!
      அதேபோல் ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.                         
       யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.' அறிவிப்பவர்:  அபு அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, அபுதாவுத்                                     
மேலும் நபி(ஸல்) அவர்கள், 30 நோன்பும், 6 நோன்பும் சேர்த்து 36 நோன்புகளாகிறது. நன்மைகள் ஒன்றுக்கு பத்து என்ற கணக்குப்படி பார்த்தால் தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று விளக்கமளித்தார்கள்.
மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும்.                              
பெருநாளை தொடர்ந்து ஷவ்வால் மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் புரிவானாக.

No comments: