கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 30, 2009

மாநபிக்கெதிரான மத்ஹபுகள் - 3

சகுனத்தை நியாயப்படுத்தும் மத்ஹபு
இப்போது நம்முடைய காலத்தில் புதன் கிழமையன்று நோயாளியை நலம் விசாரிப்பதைக் 
கெட்ட சகுனமாகக் கருதுகின்றார்கள். புதன் கிழமையன்று நோயாளியை விசாரிக்கச் செல்வதால் அவருக்கு இதன் மூலம் இடையூறு ஏற்பட்டால் அதை விட்டு விடுவது அவசியமாகும்.
நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 6, பக்கம் 388
இஸ்லாத்தில் சகுனம் பார்ப்பதற்குத் துளியும் அனுமதியில்லை. சகுனம் பார்ப்பதை இறை மறுப்பு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இந்த மத்ஹபுச் சட்டமோ சகுனத்தை ஆதரிப்பதோடு, அதனால் தீங்கு ஏற்படும் என்றும் கூறுகின்றது.
30 நாளில் 60 தடவை குர்ஆன் ஓதி முடித்தல்
ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமளானில் அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் தொழுகையிலேயே (இவ்வாறு) ஓதி முடிக்க வேண்டும்.
நூல்: இஆனா, பாகம் 1, பக்கம் 16
ஒரு நாளைக்கு இரண்டு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும், அதுவும் தொழுகையிலேயே ஓதி முடிக்க வேண்டும் என்பதெல்லாம் சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்பதைக் கூட இந்த நூலாசிரியர் சிந்திக்கவில்லை.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஒரு குர்ஆனை ஓதி முடிப்பதற்குத் தடை விதித்தார்கள் என்ற செய்தி புகாரியில் 1978வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்களோ ஒரு நாளைக்கு இரண்டு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள்.
ஆ­லிம்கள் மட்டும் போதைப் பொருள் சாப்பிடலாம்
கொஞ்சம் (போதைப் பொருள் சாப்பிடலாம்) என்பதன் கருத்து என்னவெனில், அது அறிவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. அது போதையூட்டக் கூடியதாகவும், தளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருப்பினும் சரியே! அதிகம் என்பதன் கருத்து, அது அவ்வாறு அறிவில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துவதாகும். எனவே மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என்பதுடன் கொஞ்சம் சாப்பிடுவது கூடும். இது ஹராம் ஆகாது. ஆனால் இதைக் கண்டிப்பாகப் பொது மக்களிடம் மறைத்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள்.
நூல்: இஆனா, பாகம் 4, பக்கம் 156
போதைப் பொருளைக் கொஞ்சமாக சாப்பிடலாம்; ஆனால் பொது மக்களிடம் இதைச் சொல்லக் கூடாது என்று இந்த நூல் கூறுகின்றது.
போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ர­) நூல்: புகாரி 6124
 ''அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி­) நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513
போதையூட்டக் கூடிய எந்தப் பொருளாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அது தடை செய்யப்பட்டது தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள். ஆனால் போதைப் பொருளைக் கொஞ்சம் சாப்பிடலாம் என்று மத்ஹபு கூறுகின்றது. அதையும் ஆலி­ம்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டுமாம். மக்களிடம் சொல்­ விடக் கூடாதாம். ஏனென்றால் அவர்கள் அதிகம் சாப்பிட்டு விடுவார்களாம். என்னே பேணுதலான சட்டம்?
தொழுகையில் விளையாட்டு
வேண்டுமென்றே காற்று விட்டுத் தொழுகையை முடித்தல் தொழுகை முடிந்ததும் (ஸலாம் கொடுக்காமல்) தொழுகையில் செய்யக் கூடாத செயலைச் செய்தோ, அல்லது பேசக் கூடாத பேச்சைப் பேசியோ, அல்லது தனக்கு விருப்பமான செயலை ஏதாவது ஒரு விதத்தில் செய்தோ தொழுகையை விட்டு வெளியேறலாம். உதாரணமாக, அந்தத் தொழுகை முடிந்த மாத்திரத்தில் ஒரு ஃபர்ளான தொழுகையையோ, அல்லது ஒரு நஃபிலான தொழுகையையோ தொழத் துவங்குவது, அல்லது அஹ்ஹஹ்ஹா என்று வெடிச் சிரிப்பு சிரிப்பது, அல்லது வேண்டுமென்றே காற்று விடுவது, அல்லது பேசுவது, அல்லது அப்படியே எழுந்து சென்று விடுவது, அல்லது யாருக்காவது ஸலாம் சொல்வது இது போன்ற செயல்களைச் செய்து தொழுகையை விட்டு வெளியேறிக் கொள்ளலாம்.
நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன் பாகம் 1, பக்கம் 448, 449
தொழுகையை எந்த அளவுக்குக் கே­க் கூத்தாக ஆக்கி விட்டார்கள் என்று பாருங்கள். ''தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனும்) தஸ்லீம் ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ர­) நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56
தொழுகையின் முடிவு ஸலாம் கொடுத்தல் தான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும் போது, ஹாஹாஹா என்று சிரித்தும், காற்று பிரித்தும் தொழுகையை முடிக்கலாம் ஹனபி மத்ஹபு கூறுகின்றது. தொழுகையையே விளையாட்டாக இந்த மத்ஹபுகள் ஆக்கி விட்டன.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…….

No comments: