கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 21, 2011

லைலத்துல் கத்ர் இரவு!!!


கண்ணியமும், மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.(97:1-5)

கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம்.ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.
  

காரணம் அன்று தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் உடைய இரவு என்று பரவலாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. பல ஹஜ்ரத்மார்களும் பிறை 27 தான் லைலத்துல் கத்ர் என்று சொல்லி வருகின்றனர். சிலஅறிஞர்கள் பிறை27ல் இல்லை என்று மறுத்தாலும், பெரும்பாலான சான்றோர்களின் கருத்து'என்று சொல்லி மழுப்பி வருவதை பார்க்கின்றோம்.

லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடசிறந்த கண்ணியமும், மகத்துவமும் மிக்க இரவு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் பிறை 27ல் தான் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரப்பூர்வமாக காட்ட முடியாது. மாறாக ரமளான் மாதத்தின் கடைசிப் பத்துநாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் (பிறை 21, 23, 25, 27,29) ஆகிய இந்த ஐந்து இரவுகளில் அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதிஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப்பத்துநாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்.அறிவிப்பவர் :ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள்.அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடி கொண்டிருந்தனர். அவர்களுடன் ஷைத்தான் இருந்தான்  எனவே, அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்துநாட்களில் தேடுங்கள்.அறிவிப்பவர் : அபுஸயித் (ரலி)
ஆதாரம் : முஸ்லிம், அஹ்மத்
  
மேற்கண்ட ஹதீஸ் மூலம் இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை ஆயிரம் மாதங்களைவிட சிறந்த அந்த இரவு மறக்கடிக்கப்படும் அளவுக்கு அல்லாஹ்விடம் மிகுந்த கோபத்திற்குரியது என்பதை புரிந்து கொண்டு சண்டை சச்சரவுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே இந்த லைலத்துல் கத்ர் இரவை கடைசிப்பத்தில் ஒற்றைப்படை இரவில் தேடுவதே மிகச் சிறந்ததாகும். அதையே நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டியும், வலியுறுத்தியும் உள்ளார்கள். 

இஃதிகாப் ரமளானின் கடைசிப்பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி,முஸ்லிம், அஹ்மத்

 நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் சுப்ஹ்தொழுது விட்டு தமது இஃதிகாப் இருக்குமிடம் சென்றுவிடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம்: புஹாரி,முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவுத்

ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம்.

எனவே ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறி போயிருக்கும். 20ம் நாள் ஃபஜ்ரு தொழுது விட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாகத் தெரிகின்றது.\

ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாப் இருக்க நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதிஸின் தொடராகும். பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதிஸ் விளக்குகின்றது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதிஸின் அடுத்தப் பகுதி விளக்குகின்றது.

உடனே ஜைனப்(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள்.அது அமைக்கப் பட்டது. நபி(ஸல்)அவர்களின் மனைவியரில் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர்.அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுது விட்டு பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள்,இவர்கள் நன்மையை தான் நாடுகிறார்களா? எனக் கேட்டு விட்டு தமது கூடாரத்தை பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தமது கூடாரத்தை பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைதான் காட்டுகிறது.நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போதுமனிதனின் அவசியத் தேவை(மலஜலம் கழித்தல்) க்காக தவிர வெளியில் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத்

 இஃதிகாப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்கா மலிருப்பதும், மனைவியை தீண்டாமலும், அணைக்காமல் இருப்பதும், அவசியத்தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். 

அறிவிப்பவர் :ஆயிஷா(ரலி) ஆதாரம் : அபூதாவூத்

இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்கவேண்டும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ, பிரத்தியேகமான வணக்கமோ ஹதிஸ்களில் காணப்படவில்லை.ஆனாலும், நம்மில் பலர் நின்று வணங்கவேண்டும் என்பதால் நபி(ஸல்) அவர்கள கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் தஸ்பிஹ் தொழுகை எனும் வணக்கமாகும். அதாவது, முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். 

பின்னர் கிராஅத் ஒதிய பிறகு ருகூவுக்கு முன்னர் நிலையில், ருகூவில், பின்னர் நிலையில், ஸஜ்தாவில், இருப்பில் இப்படி 10 தடவையாக 4 ரக்அத்களில் மொத்தம் 300 தடவை ஓதி தொழுவது தான் தஸ்பிஹ் தொழுகை. இத்தொழுகையை வாழ்நாளில் ஒரு முறையாவது தொழ வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளனர் நம் மௌலவிகள்.

 மேலும் இத்தொழுகை தொடர்பாக பல அறிவிப்புகள் இருந்தாலும் அவை அத்தனையும் ஆதாரமற்ற பலவீனமான அறிவிப்புகளாகும். அவற்றின் தரத்தை அறிந்து அதனை விட்டு விடுவது தான் அறிவுடைமையாகும்.
 ஆதாரப்பூர்வமாக இல்லாத ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யும் அமல்கள் எந்த ஒரு நன்மையையும் பெற்றுத்தராது என்பதை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட அமல்களை விட்டுவிடுவதே சால சிறந்தது.

மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நம்மால் ஏவப்படாத செயலை மார்க்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்

மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்...

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை.மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொரு செயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும். 

   அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரி

ஒருசிலர், நன்மையான காரியம் தானே! செய்தால் என்ன தவறு. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்கின்றார்கள்.அவர்களுக்கான ஒரே பதில், மார்க்கம் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்கள் எதைக் கொண்டு வந்தார்களோ, எதைப் போதித்தார்களோ அவை மட்டும்தான் கியாமத் நாள் வரை வரும். அனைத்து மக்களுக்கும், மாறாக புதிதாக சேர்ந்த அனைத்து பழக்கங்களும் பித்அத் ஆகும். இதை பற்றியே நபி(ஸல்) அவர்கள் தன் இறுதி ஹஜ்-ல் ஹஜ்ஜதுல்விதாவில் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அவ்வாறு கூறுபவர்களுக்கு மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியே போதுமானதாகும். மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் நின்று வணங்கியும், குர்ஆன் ஓதியும், திக்ரு செய்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோர வேண்டும். ரமளானுடைய நாட்களில் கேட்கவேண்டிய துஆ ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

الْعَفْوَ فَاعْفُ عَنِّي

('''அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ பஅஃபு அன்னி'') பொருள் : யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பதை விரும்புபவன்.(ஆகவே)என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!

  மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி கண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடைய முயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
நன்றி: துபை TNTJ

No comments: