அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக! ஆலு இம்ரான்-26
ஆட்சி அதிகாரத்தில் சிறிய அளவில் பயன்பெறும் வாய்ப்பை இந்த உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு வழங்கியுள்ளது.
தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் யாரும் எதிர்பாரத வகையில் ஒவ்வொரு கட்சியும் ஏறத்தாழ தனித்தே போட்டியிட்டுள்ளன. இதே முறையை சட்டமன்றம் பாராளுமன்றத்திலும் கடைப்பிடித்தால் ஒரு கட்சியின் உண்மையான சக்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துள்ள இந்த ஜமாஅத்தை பல வகையில் எதிர்த்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
நாம் ஒற்றுமையைக் குலைப்பதாக குற்றம் சாட்டியவர்களின் சாயம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.
உலக ஆதாயத்திற்காகவே நம்மை எதிர்த்தார்கள் என்பதை இந்த்த் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் என்றால் ஏன் அனைவரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவில்லை? ஒரு வார்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒற்றுமையின் அடையாளமா?
தங்களின் சுய லாபத்திற்காகவே தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை மக்கள் இந்த்த் தேர்தல் மூலம் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் நின்று இரண்டு இடங்களை வெற்றி கொண்டவர்கள் சட்டமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்காக செய்த நன்மைகள் என்ன? இந்த சமுதாயத்திற்காக குறைந்த பட்சம் குரலையாவது உயர்த்திப் பேசினார்களா? ஆளும் கட்சி வேட்பாளரை விட அம்மா புகழ்பாடியவர்கள் என்று பாராட்டு மட்டும் தான் அவர்கள் செய்த சாதனை. இவர்களும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறார்கள். இவர்கள் வந்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
வார்ட் உறுப்பினருக்குப் போட்டி போடும் உறுப்பினர் அளிக்கும் வாக்குறுதிகளைப் பார்த்தால் இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதையும் பதவிக்காக எதையும் சொல்வார்கள் என்பதையும் விளங்கலாம்.
ஒரு வார்ட் உறுப்பினரின் அதிகாரம் என்ன? அவரால் என்ன செய்ய முடியும்? என்பதைக் கூட அவர்கள் விளங்காமல் வாக்குகளை அள்ளி வீசுவார்கள்.
இந்தப் பகுதியில் பெரிய பாலத்தைக் கட்டுவேன் என்பார். இதை அவர் செய்திட முடியுமா? அதற்கு சட்டத்தில் இடம் உண்டா? அவர் பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியை வேண்டுமானால் கொண்டு வர முயற்சிக்கலாம்.
இன்னும் சிலர் எனக்கு வாக்களித்தால் இந்த பகுதிக்கு இரயில் போக்குவரத்தைக் கொண்டு வருவேன் என்பார். ரயில்வே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைக் கூட தெரியாத வார்ட் உறுப்பினர் அள்ளிவீசும் இது போன்று வாக்குறுதி அளித்தவர்கள் வெற்றி பெற்று வந்து என்ன செய்வார்கள்?
இப்படி நடக்க முடியாத, சாத்தியமற்ற தம்மால் செய்ய முடியாத பல திட்டங்களைத் தான் வாக்குறுதியாக சொல்லி ஓட்டு கேட்டுள்ளார்கள்.
அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள், வாக்குறுதிகள் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு வார்ட் உறுப்பினராக வந்த பின்னர் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருங்கள். இவ்வாறு கேட்டால் தான் அவர்களுக்குப் புத்திவரும். மேலும் மக்களிடமும் இவர்களின் ஏமாற்று வாக்குறுதிகளை அம்பலப்படுத்துங்கள்.
Courtesy:” Deen Kula Penmani” ,
No comments:
Post a Comment