துல்ஹஜ் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து பிறை 10 (7.11.2011) ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் 3 இடங்களில் திடலில் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி அளவில் கடையநல்லூரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு. புத்தாடைகள் அணிந்து தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர்.
காயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில் இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அப்துந் நாசிர் அவர்கள்; ஹஜ்ஜூப் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில் இஸ்லாம் என்பது பொது நலத்தை போதிக்கக் கூடிய மார்க்கம். இமாம் இபுறாஹிம் நபி அவர்கள் சுயநலமில்லாமல் இறைவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள். இறைவனுக்காக தம்முடைய பெற்ற மகனையும் தியாகம் செய்வதற்கு முன்வந்தார்கள். அந்த தியாகத்தை நினைவு கூறும் வண்ணம்தான் இன்றைக்கு இஸ்லாமியர்களாக நாம் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை குர்பானி கொடுத்து அந்த தியாகத்தை நினைவு கூறுகின்றோம். பிராணிகளின் இரத்தங்களோ, மாமிசமோ இறைவனைச் சென்றடைவதில்லை. மாறாக நாம் இறைவனை அஞ்சி நடப்பதுதான் இறையச்சமாகும். இறையச்சத்திற்கு எதிரான வரதட்சணை, வட்டி, இலஞ்சம், மோசடி போன்ற காரியங்களிலிருந்து விலகி இருப்பவனே உண்மையான முஸ்லிம் ஆவான். தன்னுடைய நாவினாலும் கரத்தினாலும் பிற மக்களுக்குத் தொல்லை தராதவனே உண்மையான முஸ்லிம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே நாம் பிறமக்களுக்குத் தொல்லை தராமல் பொது நலத்தோடு வாழ வேண்டும். அதற்காக இந்தத் தியாகத் திருநாளில் அனைத்து முஸ்லிம்களும் உறுமொழி எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் 5000 (ஐயாயிரத்திற்கும்) மேற்பட்டோர் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். மேலும் கடையநல்லூர் முழுவதும் 10000 (பத்தாயிரத்திற்கும்) அதிகமான ஆடு மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சி ஏழைகளுக்கு தர்மமாக வழங்க்கப்பட்டது.
கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தார்.
மேலும் 2 இடங்களில் திடல் தொழுகை
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் சேலம் கல்லூரி பேராசிரியர் மௌலவி ராஜ் முஹம்மது அவர்களும் மேலும் மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் சகோதரர்.அப்துஸ் ஸலாம் அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் தியாகத்தை பற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜித் மர்யம், மக்கா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment