கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 4, 2009

பிராத்திப்போம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவது  '' நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான். 

இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் பிரார்த்தனை!


''பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு,
 ''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' என்ற (40:60)வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372


எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது. 

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ''நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

பிரார்த்தனையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் :

பணிவோடு பிரார்த்திக்க வேண்டும்
 

பிரார்த்தனை செய்யும் போது, அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.
 

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) .
அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)
 

உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்
 

பிரார்த்தனை செய்யும் போது ''இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்'' என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.
 

அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56) 
 

வலியுறுத்திக் கேட்க வேண்டும் 

இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, ''நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்'' என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, ''இதை நீ தந்து தான் ஆக வேண்டும்; உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது'' என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.
 

'நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை'' என்று நபியவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: புகாரி 6338 

தொடர்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ்
 

அழைப்பு பணியில் என்றும் அன்புடன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) 
கடையநல்லூர்.


No comments: