கடையநல்லூர்: பலத்த மழை கொட்டியும் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலையில் கடையநல்லூர் நகராட்சியில் கடுமையான குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரப்பட்டது. இதனையடுத்து வரப்பட்ட தண்ணீர் முழுவதும் பெரியாற்று படுகையிலும், பெருங்கால், பாப்பான் கால்வாய்களிலும் திருப்பி விடப்பட்டன.இருந்தபோதிலும் பெரியாற்று படுகையில் இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் தரக்கூடிய ஆற்றுபடுகையில் அமைந்திருந்த குழாயில் சுமார் 50 அடி தூரத்திற்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெரியாற்று படுகையின் மூலமான குடிநீர் சப்ளை முற்றிலுமாக தடைபட்டது.இந்நிலையில் ஆற்றுபடுகை தண்ணீர் தான் கிடைக்கவில்லை என்ற போதிலும், தாகம் தீர்க்க தாமிரபரணி தண்ணீராவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நகராட்சி பகுதி மக்கள் மத்தியில் நிலவிவந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தாமிரபரணி தண்ணீர் வினியோகமும் தடைபட்டு விட்டது. ஏற்கனவே இந்த திட்டத்தினாலான குடிநீர் வினியோகம் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் என்ற போதிலும் 18 லட்சம் லிட்டர் வரை தான் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சீரான குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை இருந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முற்றிலுமாக தாமிரபரணி தண்ணீர் வரப்படவில்லை என தெரிகிறது.இதனால் கனமழை கொட்டி தீர்த்தும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கப் பெறாத நிலை கடையநல்லூர் நகராட்சியில் நிலவி வருவதால் கடுமையான குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியாற்று படுகையில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை போர்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.பீட்டர் அல்போன்ஸ் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனால் இந்த சீரமைப்பு பணி இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் முடிவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment