கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 26, 2009

சீனாவில் கலப்படப்பால் மோசடி - இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.

சீனாவில் ஆறு குழந்தைகளின் உயிரைப் பறித்த கலப்படப் பால் மோசடியில் சம்பந்தப்பட்ட இருவரின் மரண தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. நச்சுத்தன்மை வாய்ந்த மெலமின்(Melamine) கலக்கப்பட்ட பாலைக் குடித்து சீனாவில் கிட்டத்தட்ட 3,00,000 குழந்தைகள் சென்ற ஆண்டு நோயுற்றனர்.
சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் நற்பெயருக்கு ஊறு விளைவித்த இந்த மோசடி தொடர்பாக, மொத்தம் 21 சன்லு நிறுவன நிர்வாகிகளும் தரகர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவரான ஜாங் யூஜுன், “ஆபத்தான செயலின் மூலம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படுத்திய” குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றார். பிளாஸ்டிக் பொருள்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மெலமைன் குழந்தைகள் குடிக்கும் பால் மாவில் சேர்க்கப்பட்டதால் அந்தப் பாலைக் குடித்த பல குழந்தைகள் சிறுநீரக கல் பாதிப்புக்கு உள்ளானார்கள். மெலமின் கலக்கப்பட்ட 770 டன்னுக்கும் அதிகமான பாலை ஜாங் தயாரித்ததாகவும், அவற்றில் 600க்கும் மேற்பட்ட டன் பாலை 2007 ஜூலை மாதத்திற்கும் 2008 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் அவர் விற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மற்றொருவர் கெங் ஜின்பிங். நச்சுத்தன்மை வாய்ந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்து விற்றதற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கெங் 900 டன்னுக்கும் அதிகமான கலப்படப் பாலை விற்றார். ஆனால், கலப்படப் பால் மோசடிக்கு முக்கிய காரணமானவர் என கூறப்படும் பெண், ஆயுள் சிறைத் தண்டனையுடன் உயிர் தப்பிவிட்டார். இந்த பால் மாவு தயாரிக்கும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான தியன் வென்ஹுவா, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சென்ற ஆண்டு ஒப்புக் கொண்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை கிடையாது. தியன் வென்ஹுவா மரண தண்டனையிலிருந்து தப்பியதால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பலரும் அப்போது ஆத்திரமடைந்தனர்.




No comments: