புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் பெருகி வரும் வேளையில் தரமான கல்லூரிகளைத் தேர்வு செய்வது பெரும் சவால். பட்டத்தை விட தரம் மிக முக்கியம். போதிய வசதிகள் இல்லாத தரம் குறைந்த கல்லூரிகளில் படிப்பது எதிர்காலத்தையே வீணாக்குவதாகும்.
எனவே மாணவர்கள் சிறந்த பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து சேருவதற்கு வசதியாக, கல்லூரிகளில் உள்ள வகுப்பறை வசதி, ஆய்வுக் கூட வசதி, ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை அரசு பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டும் என்று பெற்றோரும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கல்லூரிகளில் ஆய்வு:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு தகுதி வழங்குவதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், உதவி பேராசிரியர் என 150 பேர் (சுமார் 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு) கடந்த 3 மாதங்களாக கல்லூரிகளில் ஆய்வு செய்தனர். 155 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 50 கல்லூரிகளில் மட்டுமே எதிர்பார்த்த தகுதிகள் இருப்பதாகவும், 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போதிய தகுதிகள் இல்லை என்பதும், மீதியுள்ள உள்ள கல்லூரிகள் நடுநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெரிந்துக்கொள்ள வேண்டியவை:
இந்த ஆய்வில் கல்லூரியின் அடிப்படை கட்டமைப்பு வசதி முதலில் ஆய்வு செய்யப்படுகிறது. அத்தோடு கல்லூரி முதல்வர்களின் பணி அனுபவம், பி.எச்டி. தகுதி, நூலகங்களில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கேற்ப இருக்க வேண்டிய நூல்கள், இதழ்களில் எத்தனை நூல்கள், இதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன, தேவைப்படும் பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரில் எத்தனை பேர் உள்ளனர், தேவையான எம்.இ., எம்.டெக்., பி.எச்டி.களில் எத்தனை பேர் உள்ளனர், ஆய்வுக் கூடங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன உள்ளன, கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ப வகுப்பறைகள், ஆய்வுக் கூட வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவை இருக்கின்றனவா என்பவை பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.
மாணவர்கள் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு இந்த ஆய்வு நிச்சயம் உதவியாக இருக்கும். எனினும், இது பற்றிய தகவலை அண்ணா பல்கலைக்கழகக் குழு சேகரித்தும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது மாணவர் சேர்க்கை நேரத்தில் இந்த தகவல்களை வெளியிட்டால் கல்லூரி நிர்வாகங்களுக்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உதவுவது யார்?
மெத்த படித்தவர்களாலேயே நல்ல கல்லூரிகளை அடையாளம் காண முடியாத நிலை உள்ளபோது, மற்றவர்களின் நிலை எப்படி? கல்லூரிகளுக்கு நேரில் சென்று அவற்றைப் பற்றி சாமான்ய மக்களால் தெரிந்துக் கொள்வது சாத்தியமா?
கட்டுப்படுத்த நல்ல வாய்ப்பு:
தெரிந்தோ தெரியாமலோ பெருகிவிட்ட பணம் பறிக்கும் சுயநிதி கல்லூரிகளை அரசு அமைப்புகள் கட்டுப்படுத்துவது என்பது கானல் நீர் என்றும் அவற்றை மக்களே புறந்தள்ளும் நிலை ஏற்பட்டாலொழிய அதற்குத் தீர்வு இல்லை என்பது பரவலான கருத்து. இது எப்படி சாத்தியம்? கல்லூரிகளில் அப்பட்டமாக நன்கொடைகள், கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது ஆதாரங்களுடன் சிக்கிய போது, அவற்றின் மீது மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லையே!
கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் நல்லதொரு வாய்ப்பு தற்போது மாநில அரசுக்கு கிடைத்துள்ளது. இதை அரசு கை நழுவவிடலாமா?
கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழக இணைப்பு தகுதி வழங்குவதற்காக அவற்றில் ஆய்வு செய்து சேகரித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளுமாறு வெளியிட வேண்டும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல நிர்வாகம், மக்கள் கேட்பதற்கு முன்பாகவே கல்லூரிகளின் விவரங்களை வெளியிட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரியின் தரத்தை மக்களே கணித்து, அதை ஏற்பதா? வேண்டாமா? என்ற முடிவுக்கு வருவதோடு மட்டுமல்லாமல் தரமான கல்லூரிகள் பெருக வாய்ப்பும் ஏற்படும்.
முதல் தலைமுறை மாணவர்கள்
பி.இ. படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ.-க்கு கடந்த ஆண்டைவிட (1.5 லட்சம்) இந்த ஆண்டு கூடுதலாக 25,000 பேர் விண்ணப்பிக்கின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.இ.உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலம் 2009-10-ல் கிராமப்புற மாணவர்கள் 54,073 பேர் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்துள்ளனர். இதைப் பார்க்கும்போது, அவர்களில் முதல் தலைமுறை மாணவர்கள் அதிகம் இருக்க வாய்ப்பு ஏராளம்.
முதலீடு வீணாகலாமா?
குறைந்தபட்சம் 5,000பேர் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களேயானால் ஆண்டொன்றுக்கு ரூ.16.25கோடி என 4 ஆண்டுகளுக்கு ரூ.65 கோடி மக்கள் வரிப் பணத்தை அரசு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. தவிர, தங்கள் பிள்ளையும் சமூகத்தில் நல்ல நிலை பெற வேண்டும் என்ற கனவு மெய்ப்பட ஏழை, நடுத்தர பெற்றோர் தங்கள் பணம், உடமைகளை விற்று அல்லது அடகு வைத்து கிடைக்கும் பணத்தையும் அவர்கள் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
நல்ல கல்லூரிகளை மக்கள் தேர்வு செய்ய வழி உண்டாக்குவதன் ஒரு படியாக கல்லூரிகள் பற்றிய தேவையான தகவல்களை வெளியிடுவதன் மூலம் கல்வி முதலீடு வீணாகாமல் தவிர்க்க முடியும்.
நன்றி: தினமனி
No comments:
Post a Comment