கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 1, 2010

இந்தியாவில் நீதி செத்துவிட்டது..............


அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள "வினவு" தளத்துக்கு நன்றி!


பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாதுஎன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.
ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான்சுக்குமி-ளகுதி-ப்பிலி என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போதுஇவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கைஎன்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாதுஎன்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.
கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.
ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.
நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.
அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?
எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.
அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு நீதிவழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.
பின்குறிப்பு  – 1:
அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம்  வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது  சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?
பின்குறிப்பு  – 2:
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?
நன்றி : வினவு

1 comment:

smart said...

இந்த இடுகையில் உண்மை கிடைக்கும் படித்துப்பார்க்கவும். தீர்ப்பின் நீதி புரியும்

//அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள "வினவு" தளத்துக்கு நன்றி!//comedy of the year