இன்றைய நீதிமன்றங்களில் பெரும்பாலும் தீர்ப்புகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதை அலசும் தினமணி தலையங்கம்.... பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் இப்படித்தான் வழங்கப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது...
விஷக்கிருமிகள்...
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து ஆர்.கே.சந்திரமோகனை இடைநீக்கம் செய்வதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதியை விரும்பத்தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்; இது நீதிமன்றத்தை அவமதித்ததோடு அல்லாமல், நீதியைச் செயல்படுத்துவதில் குறுக்கீடு செய்ததும் ஆகும் என்று இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி, தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள தகவல், ஏற்கெனவே எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டவைதான் என்றாலும்கூட, இப்போது ஆதாரப்பூர்வமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி அளித்துள்ள கடிதம், நடந்த சம்பவங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது. வழக்குரைஞர் ஆர்.கே. சந்திரமோகன், நீதிபதியின் அறைக்கு வந்து, முன்ஜாமீன் கேட்கும் மனுதாரர் மத்திய அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால், இந்தக் குற்ற வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியதோடு, அமைச்சர் கைப்பேசி இணைப்பில் இருக்கிறார், பேசுங்கள் என்று கொடுத்ததாகவும், அதை நீதிபதி வாங்கிப் பேச மறுத்துவிட்டதாகவும் நீதிபதியின் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், நீதிபதி ரகுபதியிடம் சந்திரமோகன் குறிப்பிட்ட மத்திய அமைச்சர், தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ஆ.ராசா என்பதாக எல்லாரும் பேசினாலும், அதை ராசா மறுத்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி, அந்தக் கடிதத்தில் எனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்று கூறும் ராசா, நீதிபதியிடம் பேச நான் யாரையும் அனுப்பவில்லை என்றும் பேட்டியளித்துள்ளார். இப்போது அந்த அமைச்சர் யார் என்பதைக் காட்டிலும், ஓர் அமைச்சர் தன் சொந்தக் காரியங்களுக்கு நீதியை வளைக்க முடிகிறது என்கிற அப்பட்டமான உண்மைதான் இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது. இதேபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு நீதிபதியின் அறையிலும் நடக்கின்றன என்பதற்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
உயர் நீதிமன்றத்திலேயே இந்த நிலைமை என்றால், மாவட்ட அளவிலான நீதிபதிகள் விவகாரத்தில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு இருக்கும்? இதில் ஆளும்கட்சிக்கு நெருக்கமான வழக்குரைஞர்களும், அமைச்சர்களுக்கு நெருக்கமான வழக்குரைஞர்களும் எந்த அளவுக்கு நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
நீதிபதியை தன் மனுதாரருக்காக வளைந்துபோகச் செய்யும் இத்தகைய முறைகேடான செயல்கள் நடைபெற முக்கிய காரணம், அரசு வழக்குரைஞர் என்றால் ஆளும்கட்சிக்கு வேண்டிய நபராகத்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டதால்தான். மிகத் திறமையான வழக்குரைஞர், பல வழக்குகளைச் சிறப்பாக நடத்தி வெற்றிகண்டவர் என்கிற திறமையெல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல், ஆட்சியில் அமரும் கட்சிக்கு விசுவாசமான வழக்குரைஞர்கள் மட்டுமே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும் ஒவ்வொரு கட்சியிலும் தனியாக வழக்குரைஞர் அணி இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கட்சியின் வழக்குரைஞர் அணியில் உள்ளவர்களை காரியத்தைச் சாதிக்க வல்லவர்களாக மக்கள் கருதுவதும் மிக இயல்பானதாக இருக்கிறது.
இத்தகைய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், நீதித்துறையில் திறமையானவர்கள் மட்டுமே நீதிபதிகளாகவும், அரசு வழக்குரைஞர்களாகவும் அமர்த்தப்படும் நிலைமை உருவாக வேண்டும். யார் திறமையானவர்கள் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு நீதித்துறை வல்லுநர்களிடமே அளிக்கப்படுவதுடன், அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். அத்தகைய நிலைமை உருவாகும்போதுதான், தன் வாதத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள வழக்குரைஞர்கள் தங்கள் தகுதியால் பொறுப்பான பதவிகளுக்கு வருவார்கள். இத்தகைய அரசியல் குறுக்கீடுகளும், தீர்ப்பைச் சாதகமாக எழுதவேண்டும் என்கிற அன்பு வேண்டுகோள் அல்லது மிரட்டல் அல்லது நீதியை விலைக்கு வாங்கும் நிலை இல்லாது ஒழியும்.
நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள் போன்ற பதவிகள் இடஒதுக்கீடு மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இல்லாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும்.
இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் தன்னிலை விளக்கம்தான் வேடிக்கையாக இருக்கிறது. அவர் தலைமை நீதிபதியாக இருந்தபோது, எந்த அமைச்சரும் எந்த ஒரு நீதிபதியிடமும் பேச முயற்சிக்கவில்லை என்று அடித்துச் சொல்லி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அவருக்கு மறந்துபோயிருக்கலாம். பத்திரிகைகளில் பதிவாகி இருக்கும் அவரது "நற்சான்றிதழ்' கே.ஜி. பாலகிருஷ்ணன் மீதான மரியாதையைத் தகர்க்கிறதே...
"பட்ட காலிலே படும்' என்பதுபோல முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை விதிவிலக்காக இருக்கும் அமைச்சர்களோ அரசியல்வாதிகளோ இருக்கிறார்களா என்பதே சந்தேகம்தான். தனது கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தவர் தேர்தலில் தோற்றவுடன் அவரை அரசு வழக்குரைஞராக்கி, பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியாக்கி நீதித்துறையில் அரசியலை நுழைத்த மாபாதகத்தைத் தொடங்கிவைத்த பெருமை தி.மு.க.வையும் இன்றைய முதல்வரையும்தான் சாரும். இப்போதைய அந்த விஷக்கிருமியின் பல்லுருவாக்கம் நீதித்துறையின் அடிப்படையையே அசைக்கத் தொடங்கிவிட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் உரையில் குறிப்பிடும்போது, ""வழக்குரைஞர் என்ற போர்வையில் நீதிபரிபாலனத்தில் எந்தவொரு நபரும் குறுக்கிடுவதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடலில் (அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு) இடம்பெறும் வரிகள் மீண்டும் நினைவுக்கு வருகிறது:
நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா-அதை
வளைப்பதற்கு வழக்குரைஞர் பட்டம் வேணுமா?
No comments:
Post a Comment