கடையநல்லூர் : கடையநல்லூரில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் முழுமையாக தடைபட்ட நிலையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடம் தண்ணீர் இரண்டு ரூபாய்க்கு பெறக்கூடிய சூழ்நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் தரக்கூடிய பிரதான பகுதியாக விளங்கும் பெரியாற்று படுகையின் மூலமாகவும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் பெருமளவில் குடிநீர் பற்றாக்குறை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து காணப்பட்டு வந்தது. ஆற்றுப்படுகைகளில் நீர்பிடிப்பு பெருமளவில் குறைந்து வருவதும்
குடிநீர் பற்றாக்குறைக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது.இதனிடையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் சரிவர கிடைக்காததால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சார்பில் டிராக்டர்கள் மூலம் நகராட்சியில் பல பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் நகராட்சிக்கு குடிநீர் தரக்கூடிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக பெறக்கூடிய குடிநீர் சப்ளை கடந்த சுமார் ஒருவார காலமாக முழுமையாக நிறுத்தப்பட்டது.இத்திட்டத்தில் குடிநீர் வரக்கூடிய பைப் லைனில் பழுது காரணமாக குடிநீர் சப்ளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 33 லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக பெறக்கூடிய நிலையும் தடைபட்டதால் நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. தொடரும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக குடிநீரை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக புலம்பி வருகின்றனர்.ஒரு குடம் தண்ணீர் இரண்டு ரூபாய்க்கு பெற்று வருவதாகவும், இத்தகைய பகுதிகளில் கூடுதலான வகையில் டிராக்டர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், இந்திராநகர், இக்பால்நகர் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment