தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில், ஜனவரி 31 திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கான செயல் வீரர்களின் கூட்டம் 02-01-2016 இன்று காலை 10:00 மணியளவில் கடையநல்லூர் மறவர் மண்டபத்தில்
மாவட்டத் தலைவர் முகம்மது பைசல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இச்செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர்கள் முகம்மது யூசுஃப், செய்யது அலி மற்றும் மாவட்டச் செயலாளர் முகம்மது தாஹா, மாவட்டப் பொருளாளர் முகம்மது அப்பாஸ், மற்றும் துணைச் செயலாளர் ஜாகிர் ஹ‚சைன், செய்யது மசூது, அஹ்மது மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் துவக்க உரையாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் "இறையச்சம்' குறித்து உரையாற்றினார். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு, ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் செயல்பாடுகளை விளக்கினார்.
இக்கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு பாராட்டு கேடயம் பரிசாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட தொண்டரணி செயலாளர் மீரான் கனி, மாவட்ட மாணவரணி அப்துல் காலித் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இச்செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பொட்டல்புதூர், தென்காசி, அச்சன்புதூர், கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வீராணம் மற்றும் நெல்லை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலிருந்து கிளை நிர்வாகிகளும் செயல்வீரர்களும் ஆர்வத்துடன் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றி கூறினார்கள்.
இச்செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1- தர்கா வழிபாடு, தகடு, தாயத்து, பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரானவை, இறைவன் மன்னிக்காத பாவமான இணைவைப்பைச் சார்ந்தவை. எனவே, இப்பெரும் பாவத்திலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என இச்செயல் வீரர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
2- சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்காக 26,31,865 (இருபத்து ஆறு இலட்சத்து முப்பத்து ஓராயிரத்து எட்நூற்று அறுபத்து ஐந்து) ரூபாய் நிவாரண நிதியை நெல்லை மேற்கு மாவட்டத்திடம் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
3- ஏர்வாடி காஜா மைதின் படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த காவல் துறைக்கு இச்செயல் வீரர்கள் கூட்டம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
4- இன்ஷா அல்லாஹ்.. வருகிற ஜனவரி 31 திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்காக, ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், முதியோர், கைக் குழந்தைகள் உட்பட பல்லாயிரக் கணக்கான மக்களை நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பில் அழைத்துச் செல்ல இச்செயல்வீரர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
5- கடையநல்லூர் தாலுகா அலுவலக நிரந்தர கட்டிடத்தை காட்டுப் பகுதியில் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, பொதுமக்களின் வசதிக்காக நகரின் மையப் பகுதியில் அமைத்திட தமிழக அரசை இச்செயல் வீரர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
6- முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை அவமதித்த இந்து மகா சபையின் தேசியத் தலைவர் கமலேஷ் திவாரியை நாடு கடத்த வேண்டும் இச் செயல் வீரர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
செய்தி மற்றும் புகைப்பட தகவல்: குறிச்சி சுலைமான்.
No comments:
Post a Comment